- தனி மனிதனின் வாழ்வை அறிவின் துணையுடன் முழுமையடைய செய்யும் செயல்முறையே கல்வி. இந்த கல்வி போதிக்கும் முறை, கால மாற்றத்திற்கு ஏற்ப வேறுபடுகிறது.
- செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட போட்டி , கல்வி கற்கும் முறையை முற்றிலுமாக மாற்றி, மதிப்பெண்களே பிரதானம் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. பெற்றோர்களும் வேறு வழியில்லாமல் இந்த வலைப்பின்னல்களில் சிக்கிக்கொண்டு, தங்கள் குழந்தைகளின் மழலையை மதிப்பெண்களில் தொலைத்து விடுகிறார்கள்.
- ஆனால் இந்த சிலந்தி வலையில் சிக்காமல், கல்வித்துறையில் சாதித்து வருகிறது பின்லாந்து.நோக்கியா போன்ற சர்வதேச அளவில் பிரபலமான கம்பெனிகளின் தாய் வீடான இந்த பின்லாந்து, உலகளவில் கல்வித்துறையிலும் சாதித்து வருகிறது பொருளாதர ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு.
- இவ்வமைப்பு சார்பில் பல்வேறு நாடுகளின் மாணவர்களின் கல்வித்திறன் குறித்த ஆய்வுகளில் பின்லாந்து எப்போதும் முன்னிலை வகிக்கிறது. சமத்துவம் என்ற அஸ்திவாரத்தின் மீது மாணவர்களின் தனித்திறனை வானுயர வளர்க்கும் பின்லாந்தின் கல்வி முறையே இதற்கு காரணம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
- பின்லாந்தில் உள்ள கற்பித்தல் முறைகளில், ஒரு குழந்தை ஆறு வயதை எட்டியவுடனே பள்ளி கூடங்களில் கால் பதிக்கிறது. நம்ம ஊரை போல பிரீ ஸ்கூல்கள் அங்கு இருந்தாலும், அங்கு பெரும்பாலும் உணவருந்துவது எப்படி, சாலை விதிமுறைகள் போன்ற வாழ்கைக்கு தேவையான அடிப்படைகள் கற்றுத்தரப்படுகின்றன.
- 6 வயதில் பள்ளிகளுக்குள் செல்லும் குழந்தைகளுக்கு உடனடியாக புத்தகத்தை கொடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் பருவத்தேர்வுகளை வைத்து பீதியூட்டாமல், ஏழு வயதை எட்டும் வரை அவர்களுக்கு விளையாட்டும், கொண்டாட்டமுமாக சக மாணவர்களுடன் பழகுவதற்கும், பள்ளியின் நடைமுறைக்கு அவர்களை அழைத்து வருவதற்கும் போதிய அவகாசம் எடுத்துக்கொள்கிறார்கள்.
- 7 வயதில் இருந்து இந்த குழந்தைகளுக்கு பாடங்கள் தொடங்கப்படுகிறது. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த மதிப்பீடுகளும், ரேங்கிங் முறைகளும் கிடையாது.
- மிக முக்கியமாக 7 வயது முதல் 16 வயது வரை கட்டாய கல்வியும், கற்பித்தல் முழுவதும் பின்லாந்து நாட்டின் ஃபீனிஷ் மொழியிலேயே நடத்தப்படுகிறது.
- கடைசி இரண்டு வருடங்களில் ஆங்கிலம் அல்லது பிரெஞ்ச் மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். பின்லாந்தில் 99 சதவீதம் பேர் ஆரம்பக்கல்வியை பெறுகின்றனர். இதற்கு காரணம் 13 வயது வரை எந்த விதமான ரேங்கிங் முறைகள் கிடையாது.
- மேலும் மதிப்பெண்கள் அடிப்படையில் யாரும் ஏற்றத்தாழ்வு காண முடியாது. அப்படியே சில தேர்வுகள் வைக்கப்பட்டாலும், அதில் அந்த மாணவர்கள் செயல்பாடு, அவர்களுக்கு மட்டுமே தெரிவிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படாது.
- ஒவ்வொருவரின் தனித்திறமையையும் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கவும், பின்னடைவை கண்டறிந்து நிவர்த்தி செய்யவும் சிறப்பு திட்டங்கள் உள்ளது. மேலும் வீட்டுப்பாடங்களை மாணவர்களே தேர்ந்தெடுத்து செய்து வரலாம்.
- பிரதான நகரங்களில் படிக்கும் குழந்தையின் கல்வி அறிவும், கடைக்கோடி கிராமத்தில் படிக்கும் குழந்தையின் கல்வியறிவும் சம அளவில் இருப்பதை பின்லாந்து கல்வி முறை உறுதி செய்கிறது.
- கல்வியை போலவே இசை, நடனம், ஓவியம் போன்ற துறைகளுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
- இதனால் 94 சதவீதம் பேர் உயர்கல்விக்கும் செல்கின்றனர். மாணவர்கள் சார்ந்து கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கற்பித்தல் முறையை வெற்றியடைவதற்கு ஆசிரியர்களே காரணம்.
- ஏனெனில் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்படுபவர்கள் 5 ஆண்டு உறைவிட பள்ளியில் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும்.
- மேலும் வகுப்பறை பயிற்சி, இராணுவ பயிற்சி,அவசர கால பயிற்சி, நாட்டின் அரசியலமைப்பு, குழந்தைகள் உரிமை குறித்த சட்டங்களை அந்த ஆசிரியர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
- இப்படி தேர்வாகும் ஆசிரியர்கள், நம்ம ஊர் ஐபிஎஸ், ஐஏஸ் அதிகாரிகளுக்கு இணையாக கருதப்படுகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த கல்வி கட்டமைப்பை உருவாக்க மிக முக்கிய காரணமும் உள்ளது.
- அதாவது, கல்வி துறை முழுவதும் அரசின் கைவசம் இருப்பதும், முக்கிய பொறுப்புகளில் சிறந்த கல்வியாளர்களே நியமிக்கப்படுவதுமே என்கின்றனர் கல்வியாளர்கள். மேலும் ஜிடிபியில் 24 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்படுகிறது.
- இதன் காரணமாகவே உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வில் பின் லாந்து குழந்தைகள் முன்னிலை பெறுகின்றனர்.
- நம் நாட்டில், ரேங்க் கார்டுகளை கைகளில் வாங்கும் 98% குழந்தைகளின் முகத்தில் பீதியும், பயமும் தொற்றிக்கொள்கிறது. ரேங்கிங் இல்லாத இந்த கல்வி முறை எப்போது தான் நம்ம ஊருக்கு வருமோ
உலகமே வியந்து பாராட்டும் பின்லாந்து கல்வி முறையில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? / SPECIAL THINGS ABOUT FINLAND EDUCATION SYSTEM
Reviewed by
TNPSC SHOUTERS Admin
on
January 21, 2023
Rating:
5
No comments: