Ads Top

தமிழர் வாழ்வியல் | TAMILAR VAZHVIYAL

 


கொண்டாட்டங்கள்

  • பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். 
  • தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்.
  • கப்பற்கலை
  • தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். 
  • இத்துறை வல்லுநர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பயன்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
அரசியல்
  • தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. 
  • தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.
  • அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. 
  • எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியஸ் அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. 
  • உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். 
  • எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்படவேண்டும் என்று வேண்டினார்.
  • ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.
அமைப்புகள்
  • தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. 
  • சங்கம் (தற்கால தமிழ்ச் சங்கம்), கோயில், இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழ்ச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும்.
இயக்கங்கள்
  • பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. 
  • இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. 
  • தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.

No comments:

Powered by Blogger.