Ads Top

தமிழர் திருநாளான பொங்கல் இந்துக்களின் மதப் பண்டிகையா?

  • மார்கழி மாதத்தின் இறுதிநாளில் போகிப் பண்டிகையுடன் தொடங்கும் பொங்கல் திருவிழா அடுத்தடுத்த நாட்களில் பெரும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தமிழர் இல்லங்களில் களைகட்டும்.
  • இந்தியா, இலங்கை மட்டுமின்றி புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களும் தங்களது பண்பாட்டு விழுமியங்களை மீண்டும் ஒருமுறை இறுகப்பற்றிக்கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது பொங்கல் திருவிழா. ஜாதி, மதம் கடந்து கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை எவ்வளவு தொன்மையானது?
பொங்கல் பண்டிகையின் தொன்மை
  • சங்க காலங்களில் அறுவடைத் திருநாளாக அறியப்பட்டது, சமகாலத்தில் பொங்கல் திருநாளாக அறியப்படுகிறது.
  • தை மாதம் என்பது சங்ககாலந்தொட்டே தமிழர்களின் வரலாற்றில் கொண்டாட்டத்திற்கு உரிய மாதமாக இருந்து வந்துள்ளது.
  • 'தைஇத் திங்கள் தண்கயம் படியும்' என்று நற்றினையிலும், 'நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து' என்று ஐங்குறுநூறிலும், 'வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையினீ ராடிய தவந்தலைப் படுவயோ'என்று கலித்தொகையிலும், 'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என்று குறுந்தொகையிலும், 'தைஇத் திங்கள் தண்கயம் போல்' என்று புறநானூற்றிலும் தை மாதத்தை கொண்டாட்டத்திற்குரிய மாதமாக சித்தரிக்கும் வகையில் பல குறிப்புகள் உள்ளன.
  • சங்க இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்து நேரடிக் குறிப்பு இல்லை என்றாலும் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகையோடு அதைத் தொடர்புபடுத்துவதற்கான கூறுகள் இருப்பதாகக் கூறுகிறார் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் அறவேந்தன்.
  • ``சங்க இலக்கியங்களில் அறுவடைத் திருநாள், தைநீராடல், தை மாதத்தை உயர்வாகக் கருதும் பதிவுகளை அதிகம் பார்க்க முடிகிறது. அதேபோலத் திருக்குறளில் மழையைப் போற்றுதல், உழவைப் போற்றுதல் பற்றி தனி அதிகாரங்களே உள்ளன. உழவைப் போற்றுதல் என்பதுதான் இன்று நாம் கொண்டாடும் பொங்கல் பண்டிகைக்கான அடிப்படை. இதிலிருந்தே பொங்கல் பண்டிகை என்பது தொல்தமிழரின் பண்டிகை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்`` என்கிறார் பேராசிரியர் அறவேந்தன்.
நன்றி தெரிவிக்கும் நாள்
  • வேளாண்பெருங்குடி மக்கள் பயிர் செய்ததை அறுவடை செய்யும் காலகட்டமான தை மாதத்தின் முதல்நாளில் தங்கள் வேளாண்மைக்கு உதவிய சூரியனுக்கும் மாட்டிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல் பண்டிகையின் நோக்கமாகும்.
  • ``இன்றைக்கு தேங்க்ஸ் கிவ்விங் டே என்று மேற்கத்திய நாடுகளில் நடத்துகிறார்களே அது போன்ற ஒரு நிகழ்வுதான் பொங்கலும். அன்றைக்கு இருந்த பிரதான தொழில் உழவுதான். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். 
  • ஆடி மாதம் விதைப்புக்கு என்றால் தை மாதம் அறுவடைக்குரியது. அறுவடை வெற்றிக்கு யார் யாரெல்லாம் காரணமோ அவர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வுதான் பொங்கல். 
  • அறுவடை வெற்றிக்கு பிரதான காரணம் சூரியனும் மாடும். அதற்காக இவை இரண்டுக்கும் நன்றி சொல்லும் வகையில் இந்த நாளைக் கொண்டாடுகிறோம்`` என்கிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
  • வீட்டில் தேவையற்றதாக கருதும் பொருட்கள் மார்கழி இறுதிநாளான போகி தினத்தன்று தீயிலோ அல்லது நீரிலோ தூக்கியெறிப்படும். தேவையற்றதாக கருதும் பொருட்களை நம் வீட்டில் இருந்தும் வாழ்க்கையில் இருந்தும் போக்குவதுதான் போகிப் பண்டிகையின் நோக்கம். 
  • பழைய கழிதலும் புதியன புகுதலும் என்பதோடு புத்தொளியுடன் தொடங்கும் பொங்கல் திருநாளில் மேல்த்தோல் நீக்காத பச்சரிசியில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைக்கப்படும்.
  • மறுநாள் உழவுக்கு உதவிய மாட்டினை சிறப்பிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும். மேற்கண்ட மூன்று தினங்கள் இன்றும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தாலும், காணும் பொங்கல் கொண்டாட்டங்கள் அரிதாகிவருவதாகக் கூறுகிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
அரிதாகிவரும் காணும் பொங்கல்
  • ``காணும் பொங்கல் என்பது நம்முடைய வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் உதவியாக இருந்தவர்களை நேரில் சென்று சந்திக்கும் நாள். இது உறவுகளை வலுப்படுத்துவதற்கான நாள். அன்றைய காலங்களில் காணும் பொங்கல் என்பது ஆணும் பெண்ணும் காணும் பொங்கலாகவும் இருந்திருக்கிறது. திருமணம் தொடர்பான பேச்சுகள்கூட காணும் பொங்கல் நாளில் நடந்துள்ளன.
  • அந்தக் காலத்தில் காணும் பொங்கல் தினத்தில் ஆற்றங்கரை, குளத்தங்கரை, ஏரிக்கரை போன்ற பகுதிகளுக்குத் தங்கள் உறவினர்களுடன் சென்று நேரத்தைக் கழிப்பது, கிராமிய விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் இன்று காணும் பொங்கல் அரிதாகிவருகிறது`` என்கிறார் புலவர் செந்தலை ந.கவுதமன்.
  • இந்தியாவில் அனைத்து பண்பாட்டு அடையாளங்களையும் இந்துத்துவ மயப்படுத்தும் வேலைகள் நடந்துவருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையும் அதிலிருந்து தப்பவில்லை. 
  • பொங்கல் பண்டிகை இந்துக்களின் பண்டிகை என்ற கருத்தை அண்மைக்காலங்களில் அதிகம் கேட்க முடியும் நிலையில், பொங்கல் என்பது மதத்தைக் கடந்து தமிழர்களின் கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு என்கிறார் செந்தலை ந.கவுதமன்.
  • ``பொங்கல் பண்டிகை என்பது என்றைக்கும் மதவிழாவாக இருந்தது இல்லை. பொங்கல் என்பது கூட்டுப் பண்பாட்டு நிகழ்வு. தீபாவளி உட்பட பல மதப் பண்டிகைகளை நேரம் பார்த்து, நாள் பார்த்து, பஞ்சாங்கம் பார்த்து கொண்டாடுவார்கள். 
  • ஆனால், பொங்கல் பண்டிகை அப்படிப் கொண்டாடப்படுவது அல்ல. பொங்கல் எப்போது கொண்டாட வேண்டும் என்று யாரும் யாருக்கும் சொல்லத் தேவையில்லை. 
  • தை முதல் நாள் என்றால் பொங்கல் என்று அனைவருக்கும் தெரியும். அதற்கு காரணம் பொங்கல் என்பது `நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை' என்ற தமிழ் மரபினரின் பண்டிகை`` என்கிறார் அவர்.

No comments:

Powered by Blogger.